புராணம் விளக்குகிறது. அவதார நோக்கம் நிறைவேறிய பின் வைகுண்டத்துக்கு எழுந்தருள ஆயத்தமானார் ராமர். அனுமன், தானும் அவருடன் வருவதாகக் கோரினார்.
அவனுக்கு ராமர் ஒரு விஷயத்தை நினைவு படுத்தினார். அதாவது, அசோக வனத்தில் ராமதூதனாக வந்து தனக்கு ராவணனிடம் இருந்து மீளக்கூடிய நம்பிக்கையை அளித்த சந்தோஷத்தில் அனுமனுக்கு ‘சிரஞ்சீவி’ பட்டமளித்து மகிழ்ந்தாள் சீதை. இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் அனுமன் மட்டும் நித்தியவாசியாக நிலைத்திருப்பான். அந்த ஆசியால், தனக்கு என்றென்றும் ராமநாமம் சொல்லிக் கொண்டிருக்கும் பாக்கியமும் யார் ராமநாமத்தை ஜபித்தாலும் அதைக் கேட்டுக் கொண்டேயிருக்கும் பாக்கியமும் கிடைத்திருப்பதாக எண்ணி சந்தோஷப்பட்டான் அனுமன்.
‘‘அவ்வாறு சிரஞ்சீவியாக வாழ்ந்து ஒவ்வொரு யுகத்திலும் உலக மக்களுடைய துயர்களைத் துடைக்க வேண்டும் என்பது உனக்கேற்பட்ட விதி. அது மட்டுமல்ல; உனக்கு நான் இடும் இன்னொரு பணியும் இருக்கிறது. அதாவது, கடிகாசலம் எனப்படும் அரியவகை மூலிகை கள் நிறைந்த மலைமீது ஏழு ரிஷிகள் தவமிரு க்கிறார்கள். அங்கு அசுரர்களால் பெருந்தொ ல்லை உண்டாகிறது. அந்த இடரை களைந்து, அவர்கள் நோக்கம் நிறைவேற நீ உதவ வேண்டும். இந்த ஒரு பணியைத் தவிர அடுத்த டுத்து உனக்குப் பல பணிகள், உன்னால் நிறைவேற்றப்பட காத்திருக்கும். ஆகவே நீ என்னுடன் வருவதை விட, என் மக்களுடைய சேவைக்காக நீ பூவுலகிலேயே நீடித்திருப்பது தான் என் விருப்பம்,’’ என்று ராமன் சொன்னவு டன் அப்படியே அவர் பாதங்களைத் தொழுது அவர் இட்ட ஆணையை சிரமேற்கொண்டான், அனுமன். அதன்படி, கடிகாசலம் வந்தான். அங்கே மனங் கசிந்து நாராயணனை நோக்கி தவம் இயற் றும் சப்த முனிகளைக் கண்டான். பகவான் மஹாவிஷ்ணுவை நரசிம்ம கோலத்திலேயே தரிசிக்க வேண்டும் என்ற அவர்களுடைய நோக்கத்தைப் புரிந்து கொண்டான்.நரசிம்மர் அவதாரம் எப்படியிருக்கும்? அந்தத் திருக்கோலத்தைத் தன்னாலும் காண இயலு மா என்று சிந்திக்க தொடங்கினான் அனுமன் அதே சமயம், காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள் அங்கே தோன்றி ரிஷிகளின் தவத் தைக் கலைக்க முயற்சித்தார்கள். அவர்களை சீண்டி, வேதனைப்பட வைத்து சந்தோஷப் பட்டார்கள். உடனே அனுமன் அவர்களைத் தாக்க முற்பட்டான். ஆனால், சற்று நேரத்திலே யே அவன் சோர்ந்து விட்டான். தன் பலமெல்லாம் எங்கே போயிற்று என்று அவனுக்கே திகைப்பான சந்தேகம். உடனே ராமனை தியானித்தான். ராமன் நாராயண னாக அவன்முன் தோன்றினார். தன்னுடைய சங்கு, சக்கர ஆயுதங்களை அவனுக்குக் கொடுத்தார். உடனே அவற்றால், வெகு எளிதாக அரக்கர்களின் தலைகளைக் கொய்து ரிஷிகளுக்கு நிம்மதி அளித்தார், அனுமன். பூரண சுதந்திரத்துடன் தொடர்ந்து தவத்தில் ஈடுபட்ட முனிவர்களுக்கு, பகவான் நரசிம்ம ராகக் காட்சியளித்தார். அதை அனுமனும் காண நேர்ந்தது. ராமனுடைய சாந்தமான முகத்தையே கண்டு களிப்பெய்திருந்த அனுமன், நரசிம்மரின் கோபாவேச தோற்றம் கண்டு பிரமித்தான். ராவணனைவிடக் கொடியவனாக இரண்யன் இருந்திருப்பான் போலிருக்கிறது, அதனால் தான் இப்படி ஒரு கோலத்தை அண்ணல் மேற்கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான்.
ரிஷிகளுக்கு ஆசியளித்த நரசிம்மர், அனுமனை நோக்கி, ‘‘அனுமனே, நானே, நரசிம்மன்; நானே, ராமன். என்னைக் குறித்து தவமிருந்த மாமுனிவர்களைக் காத்ததுபோல, இந்த உலக மக்களையும் நீ காக்க வேண்டும். அதற்கு, எனக்கு முன்னால் யோக ஆஞ்சநேய ராக அமர்ந்து அவர்களுடைய தீராப் பிணிக ளையும் தீர்த்து அவர்கள் வாழ்வில் ஆனந்தம ளிக்க வேண்டும். என்னை தரிசிக்க வரும் பக்தர்கள் உன்னையும் தரிசிப்பார்கள். அவர்கள் வேதனை தீர ஒத்துழைப்பாயாக,’’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.நரசிம்மர் திருப்பாதங்களில் தன் சிரம்படிய வணங்கிய அனுமன், ராமனாகிய அந்த நரசிம்மர் ஆணைப்படி அவருக்கு எதிரேயே ஒரு மலை மீது கோயில் கொண்டான். அது தான் சோளிங்கர்சின்னமலை.இந்தமலை 350 படிகளைக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. இங்கு உச்சியில் 50 படிகள் செங்குத்தாக ஏறுகின்றன. இந்த மலையில் சஞ்சீவி செடிகள் இருப்பதா கவும் அதன் இலைகளை உட்கொண்டால் எல்லாவகையான உடல் நோய்களும் தீரும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், அதை சரியாக அடையாளம் காட்ட யாரும் இல்லாத தால் அந்த சோதனையில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கையும் விடுக்கிறார்கள். அதைவிட, மூச்சிறைக்க மலையேறும்போது, சுற்றுப் பகுதியிலிருந்து வரக்கூடிய அந்த மூலிகையின் வாசத்தை உள்ளிழுத்துக் கொண்டாலே போதும், அதுவே உடல் நோய்களை விரட்டிவிடும் என்றும் யோசனை சொல்கிறார்கள்.
உச்சியில் அனுமன், யோக ஆஞ்சநேயராக வீற்றிருக்கிறார். நான்கு கரங்களுடன் திவ்ய தரிசனம். சங்கு, சக்கரம் ஏந்தி, அரக்கர்களை மட்டுமல்ல, அரக்க குணங்களையும் அறவே அழித்தொழிக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கி றார். தம் பக்தர்களின் எந்தச் சிறு குறையை யும் விட்டுவைக்காமல் முற்றிலுமாக தீர்த்து வைக்கும் கருணை அந்த முகத்தில் தெரிகி றது. அந்த முக தரிசனமே மனதில் தன்னம்பிக் கையையும் உறுதியையும் வளர்த்து விடுகின்றன.மஹாவிஷ்ணுவைப் போலவே தன்னையும் சங்கு, சக்கரம் தரிக்க வைத்த பெருமைக்கு உள்ளாக்கிய ராமபிரானுக்கு நன்றி சொல்லும் கனிவும் அதேசமயம், அந்தப் பெருமையை மிகுந்த தன்னடக்கத்துடன் ஏற்கும் பாவமும் தெரிகின்றன. ஒரு கரம் சங்கு, இன்னொரு கரம் சக்கரத்தைத் தாங்கி நிற்க, கீழ் வலது கரம் ஜபமாலையைஏந்தியிருக்கிறது. கீழ் இடக்கை ஜபசங்க்யை எனப்படும் ஜப எண்ணி க்கையை அளவிடும் பாணியில் அமைந்துள் ளது.இங்கே ராமர் தனிச் சந்நதியில் அழகுற கொலுவிருக்கிறார். சீதை, லட்சுமணனுடன் அவர், அனுமனுக்காகவே இங்கே அர்ச்சாவ தாரமாகக் காட்சியளிக்கிறார். அதோடு, ரங்க நாதருக்கும் தனிச் சந்நதி உள்ளது. இந்த அமைப்பு, குல தெய்வ அல்லது குல குரு வழிபாட்டுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறது என்றே சொல்லலாம். ஆமாம், அனுமனின் தெய்வம் ராமன்; ராமனின் குல தெய்வம் ரங்கநாதர்! குலதெய்வ வழிபாட்டு மரபு இங்கே அனுஷ்டிக்கப்படுவதைக் காணும்போது மெய் சிலிர்க்கிறது.யோக ஆஞ்சநேயர் உற்சவர் விக்ரகம் நின்ற கோலத்தில் எழில் தரிசனம் தருகிறது. இவரு க்கும் சதுர்புஜம் – சங்கு, சக்கரம், ஜபமாலை, ஜபசங்க்யை. இந்த யோக ஆஞ்சநேயரின் பார்வை நேராக, எதிரே பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் பாதத்தை நோக்கிய படி இருப்பது அற்புதம். நிரந்தரமாய், நரசிம்ம பிரின் பாத தரிசனம். ஆஞ்சநேயரை வழிப ட்டுப் படியிறங்கும்போது நம் மன பாரங்களும் துயர்களும் ஏன், நோய்களும்கூட நம்மை விட்டு இறங்கிய இருப்பதை உணர முடிகிறது.
பொதுவாகவே, சோளிங்கர் அமானுஷ்ய பாதிப்புகளைத் தீர்க்கும் தலமாக திகழ்கிறது. இந்த ஊருக்கு வந்து, தினமும் தக்கான் குளத்தில் நீராடி, பெரிய மலையேறி நரசிம்மப் பெருமாளையும் சிறிய மலையேறி ஆஞ்சநே யரையும் தரிசித்தால் எல்லா பிரச்னைகளும் ஆவியாகி மறையும் என்பது கண்கூடு. தினமும் அந்த அற்புதம் நிகழ்வதை காண முடிகிறது. ஏகசிலா பர்வதம் என்று இந்த இரு மலைகளையும் குறிப்பிடுகிறார்கள்…
ஜெய ராம் ஜெய ராம்.. ஜெய ஜெய சீதாராம்…
05.10.2019… நேசமுடன் விஜயராகவன்….